Followers

Friday, February 22, 2019

Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)


கடைசியாக வாசித்த நாவல் தந்த வறட்சியில் நாவல் வாசிப்பையே ஒதுக்கி வைத்தாயிற்று.அப்படியே வாசிப்பையும் கொஞ்சம். எப்போதாவது வசித்தாலும் அரசியல், வரலாறு பற்றிய புத்தகங்களே.
ஆனால் உலக வரலாற்றில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் போதே புகைப்படங்களை குறியீடுகளாகவும். அதையும் தாண்டி புத்தகத்திற்கு முகநூலில் ட்ரைலர் வெளியிட்டு அதில் ராஜாவின் இசையை போட்டு நம்மள புடிச்சு இழுக்க இந்த புத்தகத்தை வாங்கியாச்சு. 
புத்தகத்தை பார்த்தவுடன் ஒரே பயம் ஆத்தாடி எத்த தண்டி புத்தகம் என.. பயந்தே போனேன்.

புத்தகத்தின் பெயரும் அதிலிருந்த பின்நோக்கிய வருட குறிப்பும் Karthikeyan Maddy இன் முகப்பு ஓவியமும் ஏதோ மர்மம் வைத்து 
ஆர்வத்தை கூட்ட படிக்க ஆரம்பிச்சா சென்னையிலிருந்து வேலூர் போகும் வால்வோ ஏ சி பஸ் போல வேகம்..
வேலூரில் நடக்கும் ஒரு காதல் கதை தான் இந்த நாவல். வேலூரில் புதியதாக உருவாகும் ஒரு நண்பர்கள் குழு அதில் ஒரு பெண்.. அவளுக்கும் கதை நாயகனுக்கும் காதல்.. அவளுக்கும் அவன் மீது காதல். ஆனால் இந்த காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமல் இருக்கிறார்கள் பரஸ்பரம் நட்புடன்.. இணைந்தார்களா இல்லையா என அறிய புத்தகம் வாங்கி படிப்பது நல்லது. பங்கஜம் கெளுத்தி, 
கிச்சா, உமா, ரகு,குரு, விஜய், எலி மாம்ஸ், இன்னும் சிலர் அதன் பிறகு முக்கியமாக பாலாற்றையும் இளையராஜாவையும் கதை மாந்தர்களாக்கொண்டு சில பல நிகழ்வுகளாகவே நாவல் நகர்கிறது. 1983ம் 1920ம் தனித்தனி அத்தியாயங்களில் பயணித்து ஒரு சங்கிலியால் இணைகின்றன. 
இது கற்பனை கதைதான் என எண்ணிக்கொண்டே படித்தால் பாலாறு, வெயிலூர், வேலூர் புரட்சி, ஈழப்போராட்டம், இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம், கம்மவான் பேட்டை, பொங்கலுக்கு தாய்வீடு, பாயும்புலி என இரண்டு ரஜினி படங்கள் ஒரே நாள் வெளிவந்தது போன்ற வரலாற்று தகவல்கள் !!!! ஆச்சர்யமூட்டுகின்றன.. 
தேவையான இடங்களில் மட்டும் மிக குறைந்த வர்ணனைகள்.. குறைந்த சூழ்நிலை விவரிப்புகள் கதையின் வேகத்திற்கு பிரதான காரணம். 
குறிப்பாக தனிமையில் ஒரு பெண்னும் ஆணும்.. பெண் நனைந்து விடுகிறாள். அந்த இடத்தில் கூட வர்ணனைகள் தொட்டும் தொடாமல் செல்கிறதுனா பாருங்களேன்.😀
வேலூர்காரங்களும்.. என்னை போன்ற ராஜா வெறியர்களும் தவற விடக்கூடாத நாவல். 
பாட்டு கேட்டுக்குக்கொண்டே புத்தகம் படிப்பவர்கள்.. இளையராஜாவைக் கேட்டுக்கொண்டே இந்நாவலை வாசிக்க பரிசீலிக்கிறேன்..செம்ம feel. 
ஒரு அத்தியாயத்தில் இளைய நிலா பொழிகிறது பாடலை பற்றிய உரையாடல் வந்து கொண்டிருக்கும் போது எனது play லிஸ்டில் இளையநிலா பாடல் வந்தது.. ஏதோ பிணைப்பு போல.
அங்கங்கே வந்து கொண்டே இருக்கும் counter கடிகள் கொஞ்சம் அலுப்பு தான்.. சரி கதை நடக்கும் கால கட்டத்தில் இதுமாதிரியான கடிகள் பிரபலமோ... என்னவோ 
சட்டென்று குறையென படுவது அடிக்கடி வரும் ஆங்கில உரையாடல்கள்.. கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். வாத்தியார்களே 😀

வாழ்த்துகள்.. 💙

Monday, March 20, 2017

ராஜ போதை

வாழுதலின் அவசியத்திற்கான 
தினப் போராட்டத்திலும்
அலைக்கழிப்புகளிலும் 
அயற்சியடைந்த நான் 
தனியே அங்கொரு அரங்கினுள் 
நுழைகிறேன் .
சகாக்கள் சிலர் எப்போதாவது
எழுந்து ஆடி ..மறையும் புயல் அரங்கமே சிறந்ததெனவும் கூறி
களைந்தனர் .
சென்றவர்கள் சிறிது நேரத்தில்
இந்த அரங்கு வாசலில் வந்து நின்றார்கள் என பின்னறிந்தேன் .
உள் நுழைந்தவுடன் ஒரு இசைக்கருவிக்கு வெள்ளாடை
அணிவித்தார் போல் ஒருவர் அமர்ந்திருந்தார் .
அவர் எனக்கானவராகவே இருந்தார் .
தன் மேசையில் பல புட்டிகளில் தேமதுர ரசங்களை நிரப்பி வைத்திருந்தார்
அவற்றை பற்றி எனக்கு ஒரு அறிவும் இல்லை எனினும் அதை எனக்கு ஏற்றபடி , நான் பருகும் விதத்தில் பரிமாறுவதற்கு எத்தனித்தார்.
ஒரு புட்டியை திறந்து ஊற்ற
அனாயசமாக பருகினேன் நான் .
எனது குவளையை நான் கிழ் வைக்கையில்
என் வாயில் வார்த்தைகள் சரியாக
வராதிருக்கும் போது நான் முனுமுனுத்த ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது .
அடுத்த புட்டியின் ரசத்தில்
பதின்மத்தின் வாசற்படியில்
நான் முதல் காதலைச் சொன்ன போது ,நிராகரித்தவள் அருகில் புன்னகைக்கிறாள் .
அடுத்ததில் நண்பனின் வயல்கரை ஓரத்தின் அரசமர இலை காற்று உரசுகிறது .
அடுத்ததில் உயிர் நண்பண் கட்டியனைக்கிறான்
அடுத்ததில் பெருமழைக்கான சாரல் முகத்திலடிக்க,மண் வாசனை நாசியிலேறுகிறது
அடுத்த்தில் ஒர் திருவிழா ஊர்வலத்தினுள் செல்கிறேன் .
அடுத்ததில் விடுப்புக்கு அக்காவீட்டுக்கு சென்ற இரவு அம்மாவை நினைத்தழுத கண்ணீர்
கண்களை கழுவுகிறது .
அடுத்ததில் காதலிடம் காதலை சொன்ன மனித்துளி வந்து விழுகிறது .
அடுத்ததில் அகாலத்தில் மரணித்த அப்பா வந்து ஆசிர்வதித்து போகிறார் .
அடுத்ததில் மகளை கையில் ஏந்தியபோதான வாசமும் ..வாயில் சோற்றுடன் அவள் இட்ட முத்தமும் கன்னத்தில் பிசு பிசுக்கிறது .
இப்படியே அவர் வழங்கி கொண்டிருக்க, நான் பருகி கொண்டே ஒரு உலகளாவிய பெரும்பயணம் போகிறேன் .
JS பாக்,மொசார்ட் ,பீத்தோவன் அரங்குகளின் வழங்கப்ப்படும் இரசத்தின் சுவை இருப்பதாக உளறினேன் .
அவர் மெல்ல புன்னகைதப்படியே இருந்தார் .
நானோ ராஜ போதையில் ...கண் அயர்ந்தேன் .

#ராஜ_ரசிகன்
#ராஜ_போதை

Wednesday, July 27, 2016

ஓர் வரலாற்றின் முதல் வரி



பாலையில் ஊறிய

கிளை நதியொன்று ,

பெருங்கடல் கலக்கிறது.

இருள் சூழ் கூட்டத்தின்

இரண்டாம் சுடரென

பேரொளியின் ஒருபுள்ளி

பெருவெளிச்சத்தின்

சுடர் விடுகிறது .

கரும் புலியொன்று

அறிவாயுதம் பழக

கல்விக்களம் நுழைகிறது.

வாயாடல் உலகமொன்று

வகுப்பறைக்குள் சுழல

தன் இயக்கம் துவங்குகிறது

எல்லாருக்குமான நீல மேகம்

வறன்டவர் நிலங்களில்

வசந்த மழை தர விரைகிறது .

இல்லாமை புத்தகத்தை

முழுதாய் படித்தவனின்

கவிதையொன்று

எளியவர் வாழ்வகராதியில்.

இல்லாமை எனும் சொல் தேடி

அழிக்கப் புறப்படுகிறது .

இப்படியாக ஒரு வரலாற்றின் முதல் வரி எழுதப்படுகிறது

"மகள் பள்ளிக்கு செல்கிறாள் "







‪#‎மகிழ்ச்சி‬


தமிழ் சினிமா எப்படியான நீரோட்டத்தில் பயணிக்கிறது என்பதை அறியாமல் இன்னும் அதே பாணி கதைகளில் ரஜினி நடித்துக்கொண்டிருக்கிறாரே என லிங்கா படத்தை பார்த்த பிறகு நான் வருந்தியதுன்டு ஆனால் ...ரஜினி மாறிவிட்டார் !!!!!கபாலியில்!! மாற்றியவர் இயக்குனர் பா.ரஞ்சித் . சில ரஜினி ரசிகர்களும் மற்றும் சில குறைகூறிகளும் இன்னும் கே.எஸ். ரவிகுமார் ,பி. வாசு ரசிக வகையறாக்களாக இருப்பதே இப்படத்திற்கு வரும் எதிர்மறை விமரிசனங்கள்.
இயக்குனர் ரஞ்சித் "கபாலி"என்ற பெயரை படத்திற்கு சூட்டியது ,அதை ரஜினி தன் படத்தலைப்பாக ஏற்றுக்கொண்டதே...இது ரஜினி படம் இல்லை என்பதற்கான முதல் ஆதாரம்.பழைய சினிமாக்களின் தயவின்படி இதற்கு முன தமிழ்நாட்டில் யாருக்கும் கபாலி எனகிற பெயரைப்பற்றிய ஒரு நல்ல அபிமானம் இருக்க வாய்ப்பில்லை .
ஒரு கேங்க்ஸ்டருக்கும் தனிப்பட்ட உறவு சார்ந்த உணர்வுகள் இருக்கும் அப்படியான உறவுகளைத்தேடிக்கொண்டே எதிர் வரும் பழைய ,புதிய எதிரிகளை அவன் பழி வாங்குவதே இப்படம் .படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் டீசரில் காட்டிய கபாலி இல்லை என்பது புலனாகிறது ..இதில் ரஞ்சித்தும் அவர் சகாக்களும் ரஜினி என்ற உச்சத்துடன இனைந்து் மிக அநாயசமாக ஒர் உணர்வு பயணத்தை வழிநடத்தி செல்கிறார்கள். ரஜினியும்அப்படியே அவர்களுக்கு ஒத்துழைத்திருக்கிறார்.இவர்களுக்கு பக்கத் துனையாக சந்தோஷ் நாராயணனின் இசை. மாய நதியொன்று படம் முழுவதும் ஓடுகிறது,அதின் ஓட்டம் குறைகையில் நெருப்புடா என பற்றி எரிகிறது .
,ஆறிலிருந்து அறுபது வரை,முள்ளும்..மலரும்.,தில்லுமுல்லு,ஜானி ,தளபதி மற்றும் எந்திரன் போன்ற சில படங்களைத்தவிர மற்ற பல படங்களில் ரஜினி என்ற மகா நடிகனை மசாலாத்தடவியே நமக்கு பரிமாறி விட்டார்கள் .இப்படத்தில் உறவுகளின் பிரிவையும் அவர்கள் திரும்ப கிடைக்கும் போது அவர் வெளிக்காட்டும் நடிப்பிலும் ரஜினியின் மசாலா முழுவதும் கழுவப்பட்டிருக்கிறது ... ஆவ்சம் ரஜினி சார் .💟💟💟💟💟💟
அறிமுக காட்சி மூலமாக அவரின் தற்போதைய நிலையை அதாவது அவரின் உறுதியை சொல்லுவது,போதைக்கு அடிமையானோர் மற்றும் அத்தொழிலில் ஈடுபடுவோர்...ஜானி ,ரித்விகா ,மற்றும் பள்ளி மாணவர்களென எல்லாருடைய குணநலன்களை காட்சியமைப்பில் அப்படியே வெளிப்படுத்தும் விதம் அங்காங்கே தெறிக்கும் வசனங்கள் என .. ஆஹா ரஞ்சித். வெல் டன் .குறிப்பாக அனைவரின் உடை ..மற்றும் அனிகலன்கள்.இடத்தேர்வு கலை என படக்குழுவினரின் உழைப்பு வண்ணங்களாய் காட்சிகளில் விரிகிறது . படத்தின் முதல் பாடலுக்கு முன் கார் பயணத்தில் வரும் டீட்டெயிலீங் காட்சிகள்,சென்னை ரவுடிகளின் உதவிகள் மற்றும் ,மனைவியை தேடும் நீண்ட காட்சி எனும் விதமாக எடிட்டிங்கில் குறை என சொல்ல தோன்றுகிறது. இவைகளை குறுக்கி ஆக்சன் காட்சிகளை நீட்டியிருந்தால் குறை சொல்ல வாய்பில்லாமல் தவித்திருப்பார்கள் ரஜினி ,ரஞ்சித் Haters.. .மற்றபடி ரஜினி தன்னுடைய எல்லா மாயாஜாலங்களை தவிர்த்து இயக்குனரின ஆட்டுவித்தலுக்கு தன்னை உட்படுத்தி தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவரின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படம் இந்த "கபாலி"
மிக முக்கியமாக "மகிழ்ச்சி"என்ற ஒரு தமிழ் வார்த்தையை எல்லையில்லா பிரபலமாக்கிய காரணத்திற்காகவே இப்படத்தை நெகிழ்ச்சியுடன் குடும்ப சகிதமாக ரசிக்கலாம் .

Sunday, September 27, 2015

பரவும் விஷம்

ஒரு விலங்கை கழுத்தறுப்பது  போல  ஒரு இளஞனை கொலை செய்த மிருகம் ஒன்று  அதே வழக்கை கையாண்ட மற்றும் தானே தற்கொலை  செய்து கொண்டார் என கூறப்படும்  மறைந்த காவல் துறை உயர் அதிகாரியுடன் பேசிய உரையாடலை  கேட்க நேர்ந்தது .தான் கொலை செய்துவிட்டோம்  என்ற குற்ற உணர்ச்சி  துளியும் இல்லாமல்  மிக சகஜமாக  பேசிகொண்டிருக்கும் மிருகத்திடம் யார் பொய் சொல்வார்  அவன் கழுத்தறுத்து  கொலை செய்தது கோகுல்ராஜ் எனும் இளைஞனின் உயிரை மட்டும் அல்ல  ஒரு எளிய சமுக குடும்பத்தின் அத்தனைக் கனவுகளையும் என்று . ஒரு கொடூரன், படும்  பாதக செயலை செய்துவிட்டு  தமிழ்நாடு முழுவதும் உலா வர முடிகிறதென்றால் ...நவீன காலத்தின்  அத்துனை தொழில் நுட்பங்களுடன் அவனால்  தன்  நிலையை வெளிபடுதிகொள்ள முடியுமென்றால் , காவல் துறைக்கே   சவால் முடிகிறதென்றால் ..அவனுக்கு எவ்வாறானபின்புலம் இருக்கும் ??? இதைவெறும் அதிகாரிகளின்  ஒத்துழைப்பு என்று  சுருக்கி விட  முடியாது .அவனது சாதியின் பலம் அவ்வளவு ... அவனைக் காட்டிகொடுக்காத ஒவொருவரும்( அவன் சொல்லும் ஹோட்டல் காசாளர் உட்பட ) இந்த கொலைக்கு உடன் படுகிறார்கள் என்பதே உண்மை. தங்கள் மீது விழுந்த கோகுல் ராஜ் என்ற இளைஞனின் ரத்த துளியை எதைக்கொண்டு துடைப்பார்கள் ????.

சிலநாட்களுக்கு முன்பாக ஒரு தெலுங்கு நண்பன் என்னிடம் உங்க  தமிழ் ஆளுங்கள தமிழ் நாட்டவிட்டு  வெளிய போனா ஒருத்தனும் மதிக்க மாட்டாங்கனு சொன்னான்,நான் அவனிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு  உங்களுக்கெல்லாம் எங்க மேல பொறமை அது தான் இப்படி பேசுறீங்க ,தமிழன் நாகரீகத்திலும் ,ஆங்கில உச்சரிப்பிலும், வேலையிலும் மற்ற மாநிலத்தவர்களை ஒரு படி மேல இருப்பான் சொல்லி சண்டையிட்டேன் .. அந்த வாக்குவாதத்தின் போது  அவன் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் யோசிக்க வைத்தது " தன் ஊரை விட்டு வெளியே ஒரு கன்னடாக் காரன் இன்னொரு கன்னடகாரனை கன்னடனா மட்டும் பாப்பான் ..ஒரு தெலுங்கன்.. தெலுங்கனை தெலுங்கனகவும் ,மலையாளி மலையாளியாகவும் பாப்பான் ஆனா நீங்க மட்டும் தன அவன் எந்த சாதின்னு பாப்பீங்கனு  சொன்னான் - உண்மை தானே ??? - சாதி தான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்ற அண்ணலின் வார்த்தை அடிக்கடி  காதில் ஒலிக்கிறது ....தற்போது தமிழ் நாட்டில் சாதி தான் சமூகமென்று ஆகிகொண்டே வந்து விஷம் பரவ ஆரம்பித்திருக்கிறது ..நாம் அதில் மரணிக்கும் நாள் வெகு தூரம் இல்லை .

Saturday, September 5, 2015

வகுப்பறை கடவுள்.



கைமாறு எதிர்பாரா கடவுள்
நிற்கும் கருவறை -வகுப்பறை ..
பொதுநலம் என்பதன்
உதாரணச்சொல் - ஆசிரியர்
கற்பாறை ,மணல்,முட்புதர்,
நல் நிலம்  எதுவெனினும்
பாரபட்சமின்றி மழை தரும் வானம்
எதிர்காலம்  அதை எப்படி
எதிர்க்கலாம் என்பதை சொல்லி தந்த  சூத்திரம்
கல்வி  மந்திரம் ஓதி
வருங்காலம் காட்டிய மாயக்கண்ணாடி
எங்களை  தூக்கி விட்ட கயிறு ஆசான் ..
நீங்களில்லையெனில் எம் வாழ்க்கை உயர்ந்திருக்காது அரை சாண் ...

Saturday, June 13, 2015

காக்கா முட்டை - நல்ல சுவை


பல வருடங்களுக்கு முன்பு தொலைகாட்சி விளம்பரங்களில் விலை உயர்ந்த உணவு பண்டங்களை  மிகைபடுத்தி  காட்டும் போது  அதை  பார்க்கின்ற ஏழை  குழந்தைகள் ஏங்கி போகின்றனர் . அதை வாங்கி  தின்ன முடியாத அவர்கள் மிகுந்த   மன பாதிப்புக்கு  உள்ளாவார்கள் எனவே அந்த  விளம்பரங்களை தடை செய்யவேண்டும்  என நீதிமன்றத்தில்  ஒரு பொது நல வழக்கு  தொடரப்பட்டது . அந்த வழக்கில்  விளம்பரங்களை  தடை செய்யமுடியாது எனவும் அவ்வாறு விளம்பரம்  ஒளிபரப்பும் வேளைகளில் கிழே அதற்கான  பொறுப்பு  துறப்பு  செய்தியை போட வேண்டும் என்று தீர்ப்பு வந்ததாக நினைவு  .அதாவது  இப்போது எல்லா திரைப்படங்களிலும்  பெயர் போடுவதற்கு  முன்னால் போடுகிறார்களே  இத்திரைப்படத்தில்  வரும் காட்சிகள் அணைத்தும்  கற்பனையே  என்பது  போல .
காக்கா  முட்டை - இரு  சிறுவர்கள்  pizza  தின்ன ஆசைப்பட்டு  அதை எப்படி தின்றார்கள் ?? என்பதே கதை ..சற்றே  நீளமான குறும்படம் போல  இருந்தாலும்  சமகாலத்தின் முக்கியமான  பிரச்சனைகளை  அழகாக தொட்டு செல்கிறார் இயக்குனர் . விளிம்பு நிலை  மனிதர்களின் ஆசைகள் , பள்ளி இடை நின்ற சிறுவர்களின் வாழ்க்கை , மேற்கத்திய உணவின் மீதான மோகம் ,  செய்தி ஊடகங்களின்  வன்மம். அரசியல் துரோகம் ,மற்றும் சென்னையின் அழுக்கை  அப்படியே அழகாய்  பதிவு செய்திருகிறார்கள்..
விருதுக்காக  எடுக்கப்பட்ட  படம் போல் தெரிந்தாலும்  வசனம், எடிட்டிங் , பின்னணி இசை  ..LOCATION  அனைத்தும்  நல்ல  சினிமாவுக்கானது
கெட்டு  போனா  நூலு  நூலா  தண்டா  வரும் ..என்ற  வசனம் Pizza  பிரியர்களாலயே கை தட்டி ரசிக்க கூடியது .
படத்தில் எல்லாரும் கை தேர்ந்த நடிகர்கள் போல நடித்திருப்பது மிகபெரிய பலம் .. அந்த நாய்க்குட்டி உட்பட..
இன்னும் நிறைய இருக்கு .. வெண்திரையில்  குடும்பத்தோடு ருசித்து  மகிழுங்கள்  ..
இயக்குனர் மணிகண்டன் ,ஜி வி பிரகாஷ் , தனுஷ்  மற்றும்  வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு : PIzza பிடிக்காதுன்னு  சொன்னா  என்ன கிண்டல்  பண்ற  அலுவலக நண்பர்கள் அனைவருக்கும்  இப்படத்தில்  வரும் கடைசி  காட்சியில் சின்ன காக்கா  முட்டயோட   Face  expression   தான்  பதில் ....