Followers

Monday, March 20, 2017

ராஜ போதை

வாழுதலின் அவசியத்திற்கான 
தினப் போராட்டத்திலும்
அலைக்கழிப்புகளிலும் 
அயற்சியடைந்த நான் 
தனியே அங்கொரு அரங்கினுள் 
நுழைகிறேன் .
சகாக்கள் சிலர் எப்போதாவது
எழுந்து ஆடி ..மறையும் புயல் அரங்கமே சிறந்ததெனவும் கூறி
களைந்தனர் .
சென்றவர்கள் சிறிது நேரத்தில்
இந்த அரங்கு வாசலில் வந்து நின்றார்கள் என பின்னறிந்தேன் .
உள் நுழைந்தவுடன் ஒரு இசைக்கருவிக்கு வெள்ளாடை
அணிவித்தார் போல் ஒருவர் அமர்ந்திருந்தார் .
அவர் எனக்கானவராகவே இருந்தார் .
தன் மேசையில் பல புட்டிகளில் தேமதுர ரசங்களை நிரப்பி வைத்திருந்தார்
அவற்றை பற்றி எனக்கு ஒரு அறிவும் இல்லை எனினும் அதை எனக்கு ஏற்றபடி , நான் பருகும் விதத்தில் பரிமாறுவதற்கு எத்தனித்தார்.
ஒரு புட்டியை திறந்து ஊற்ற
அனாயசமாக பருகினேன் நான் .
எனது குவளையை நான் கிழ் வைக்கையில்
என் வாயில் வார்த்தைகள் சரியாக
வராதிருக்கும் போது நான் முனுமுனுத்த ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது .
அடுத்த புட்டியின் ரசத்தில்
பதின்மத்தின் வாசற்படியில்
நான் முதல் காதலைச் சொன்ன போது ,நிராகரித்தவள் அருகில் புன்னகைக்கிறாள் .
அடுத்ததில் நண்பனின் வயல்கரை ஓரத்தின் அரசமர இலை காற்று உரசுகிறது .
அடுத்ததில் உயிர் நண்பண் கட்டியனைக்கிறான்
அடுத்ததில் பெருமழைக்கான சாரல் முகத்திலடிக்க,மண் வாசனை நாசியிலேறுகிறது
அடுத்த்தில் ஒர் திருவிழா ஊர்வலத்தினுள் செல்கிறேன் .
அடுத்ததில் விடுப்புக்கு அக்காவீட்டுக்கு சென்ற இரவு அம்மாவை நினைத்தழுத கண்ணீர்
கண்களை கழுவுகிறது .
அடுத்ததில் காதலிடம் காதலை சொன்ன மனித்துளி வந்து விழுகிறது .
அடுத்ததில் அகாலத்தில் மரணித்த அப்பா வந்து ஆசிர்வதித்து போகிறார் .
அடுத்ததில் மகளை கையில் ஏந்தியபோதான வாசமும் ..வாயில் சோற்றுடன் அவள் இட்ட முத்தமும் கன்னத்தில் பிசு பிசுக்கிறது .
இப்படியே அவர் வழங்கி கொண்டிருக்க, நான் பருகி கொண்டே ஒரு உலகளாவிய பெரும்பயணம் போகிறேன் .
JS பாக்,மொசார்ட் ,பீத்தோவன் அரங்குகளின் வழங்கப்ப்படும் இரசத்தின் சுவை இருப்பதாக உளறினேன் .
அவர் மெல்ல புன்னகைதப்படியே இருந்தார் .
நானோ ராஜ போதையில் ...கண் அயர்ந்தேன் .

#ராஜ_ரசிகன்
#ராஜ_போதை