Followers

Friday, September 14, 2012

நீரும் நெருப்பும் ..


சாலையில் நடக்கையில் உரசல்களில் 
துளிர் விடும் நெருப்பை 
சப்தமின்றி அணைத்து விட்டு போகிறது 
உன் குழி கன்ன புன்னகை ..

Friday, May 4, 2012

பெரு நகரின் பதிவுகள்


  • அரை உடல் தெரியும் மகள் அணிந்த ஆடை ,
    ரசித்தபடி சிரிக்கிறாள் ,அடையாளம் தொலைத்ததன்
    விளைவு தெரியா தலைவிரி கோல தமிழ்த்தாய்
    .
    காதில் சிறு வளையம்கேசம் இறுக்கி
    பின்னலிட்ட  யுவன் ஒருவன்
    சலவை மறந்த கால்சட்டையோடு .
    நடக்கிறான் நளினம் காட்டி .

    எத்திசையும் மக்கள் மாநாடு , சிலர்
    காதுக்குள் முனகும்  இசையோடு மட்டும் பேசியபடி .

    அவசரம் பொது மொழியாய்
    வேகம் கட்டாய சட்டமாய்
    இடம் பெயர்வு  எப்போதும் எல்லாருக்குமான ஒன்றாய்.
    அகால விபத்து நடந்தாலும் அலுவலக தாமத
    கவலையுடன்  சாலை நெரிசலில் மனிதர்கள் .
    வீதிகளின்  குறுக்கு விளையாட்டில்
    முகவரி தொலைத்து  நிற்கும் வீடுகள்.

    கடல் கலக்கும் குட்டி ஆறு ,
    இரு கைகளில் குடிசை தாங்கி ஊர் சுற்றும் .

    மாதம் பன்னிரண்டும் முட்டிய வயிறுடன்
    மாநகர பேருந்து

    கன்னிதமிழ் , ஆடை களைந்து
    வன்புணர்ச்சி செய்யபடுகிறாள்
    வாசிகளின் நாவில் ..

    மரண நிகழ்விலும்  , அழுகையை அமுக்கி வைக்கும்
    திறனில்  கைதேர்ந்தோறாய்
    அடுக்கு வீடுகளில்  குடியிருப்போர் .
    கடற்கரையில் காமம்
    மணலாய் பரந்து கிடக்க ..காதல்
    முத்தாய் .. ஒளிந்திருக்கும் கடலுக்குள்

    களவியின் முன் விளையாட்டுடன்
    படகின் பின்புறமும்
    ஆளில்லா ரயில் நிலைய இருக்கையிலும்
    ஜோடிகள் தம் காதல் சாரம் நிரூபிக்க இடம் பிடிக்கிறார்கள்
    வீதி நாய்களிடம் சண்டையிட்டு ..

    மஞ்சள் வாகனங்களில்
    அரக்கு நிற சட்டையுடன்  வீதி உலா வருகிறார்
    பகல் கொள்ளையர் சிலர்.

    அடைமழை ஆட்டம் , குளிர் அறையில் உலர்த்தல்
    தள்ளாடிய படியே கடக்கின்றன சனிக்கிழமை இரவுகள் .
    ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் ,
    அரங்குகளுக்குள் ..
    கையேந்தியபடி ஒரு கூட்டம் வாயில் காத்தபடி ..

    சூரியனுக்கு  முன் கண்விழித்த தமிழன்
    டாஸ்மார்க்கில் தவமிருக்க
    கூட்டம் கூட்டமாய் வந்திறங்குவார்
    பனிரெண்டு மணி நேரமும் சளைக்காமல்
    உழைக்கும் வடவர் பலர் ...
    உலகின் தலை சிறந்த மகிழ்வுந்து பயணிக்கும் சாலையில்
    வீடில்லா மனிதன் உறக்கம் ..


    அன்றாடம் காட்சிகள் இவையாக
    நரகமென நகர்கிறது பெரு நகர் வாழ்க்கை


Friday, April 27, 2012

அழையா விருந்தாளிகள்

அம்மாவும் அப்பாவும் நன்றாகத்தான்
இருக்கிறார்கள் சண்டையில்லாமல்,
குடித்து விட்டு வந்த தம்பி 
படுக்கையில் வாந்தி எடுத்தாய் இதுவரை 
குற்றச்சாட்டு ஒன்றும் இல்லை
அக்காள்களும் , மனைவியும் 
பிணைந்தே இருக்கிறார்கள்  மரமும் நிழலுமாய்  .
சத்தம் வீட்டில்  சத்தம் இல்லாமலேயே இருக்கும் 
என்றாவது கத்தும் அடுக்களை பரணி  தவறி 
 விழுந்த பித்தளை  பாத்திரம்,
மகளின் அழுகை சத்தமும் வாசலிலேயே  
படுத்து கிடக்கும் ..வெளி செல்ல மனதில்லாமல்
மாமியார் கொடுமை,நாத்தனார் சித்ரவதை
பழிவாங்கும் மாமா, ஏமாற்றப்பட்ட தங்கை 
சொத்து சண்டை ,காவல் நிலைய விசாரணை 
 நீதிமன்ற அலைச்சல் ,வீண் சவால் ..
இவையொன்றும் இல்லை எங்கள் வீட்டு அகராதியில் தினந்தோறும் வந்து அரங்கேற்றி போகிறார்கள் ..
தொலைக்காட்சியில் நெடுந்தொடர் பாத்திரங்கள்..




Wednesday, February 8, 2012

தமிழ்க்கொலை

மதகுபட்டியில் ஒன்றாய்
படித்த நண்பன் ஒருவனை
பெருநகரத்தின் அவசரத்தில்
ரயிலில் கண்டேன்..
ஹாய் .. ஹவ் ஆர் யு ?
என்ற அவன் விசாரிப்பு
ஒரு பிடி மண் அள்ளிபோட்டது
தமிழின் மீது ..